இடுகைகள்

சன்னத நட்சத்திரம்

படம்
இன்று ஒரு நட்சத்திரம் கேட்கிறேன் 
மௌனமாய் நகர்கிறது வானம் 
உன் முகம் போலவே எதையும் காட்டா இருள் 

சன்னதம் கொண்ட சந்தர்ப்பங்களை 
மீள்நினைவு கொள்ளவும் அறியாது 
மௌனமாகக் கல் பொறுக்கிக்கொண்டு 
அமர்ந்திருப்பாள் கனகா அத்தை
யாருமிலாத பொழுது ரகசியமாகக் கேட்பாள்
அப்பிடிஎல்லாமா கத்தினேன்
தலையசைத்தாலும்
அவள் கண்களில் தெரிவது திருப்தியா
அவநம்பிக்கையா
இன்றுவரை புரியவில்லை 

என்னால் முடிந்தது
அமாவாசை வானிடம் நட்சத்திரம் கேட்பது
பின்
மௌனத்தை எதிரொலிப்பது


ஈர மணல்

படம்
சிப்பியும் சங்கும் அள்ளி வராதவர் 
காலோடும்
ஒட்டிவந்துவிடுகிறது
ஈரமணல்


*******************************************************
தொலைவதற்கான ஆயத்தம் தேடலாக மாற
தேடலுக்கான ஆயத்தம் 
தொலைதலாகவில்லை
இருக்கிறேன்
இருக்கலாம்

***********************************************************
அழாதே எனச்சொல்லவில்லை
காலையில் அழாதே என்றாய்
பக்கத்து கண்ணாடியில் தற்செயலாக நோக்கிய
அழுவதற்கான காரணங்கள் 
திகைத்து நின்றன

****************************************************************

கிள்ளக்கிள்ள துளிர்க்கும் 
பசலைக்கொடிக்குப் புரிகிற மாதிரி 
ஒருமுறையாவது நன்றிசொல்ல வேண்டும் 
முடிந்து போகுமுன்

*********************************************************************
நேற்று மாலை வெளிச்சத்தைவிட 
இந்தக்காலை வெளிச்சம்
பூரணம் காட்டுகிறது
இடையில் வந்த இருள் 
தள்ளிநின்று சிரிப்பதை 
நான் கேட்க விரும்பவில்லை
பார்க்கவுமில்லை
அட..
அதைத் தெரியவே தெரியாது என்றே வையுங்கள்

*****************************************************************************


மூக்குத்திப் பெண்கள்

படம்
எப்படியோ முடிந்தது
பிய்த்துப் பிடுங்கும் வறுமையிலும்
தோடு மூக்குத்தியை ஆடை போல அடிப்படையாய்ப்
பார்க்க அதனினும் கொடிதான பொழுதுகளில்
அடகுக்குப் போகும் போதும்
கவுரவத்தைக் காப்பாற்றடி என்று
காதணிகள் கண்ணீரோடு சொல்லிப் போனது
எண்ணெய் படிந்த ஒற்றைக்கல் மூக்குத்தியிடம் அணிவிக்கும் பொழுதுக்கு
வைபவப் பெருமையை அடையாவிடினும்
தோடுகள் மூக்குத்தியை
துணைச் சொல்லாகவே ஏற்றன. அறியாத வயதில் சுழற்றிவிட்ட திருகைக்
கழற்றும் கொடுமை கருதியே பிழைத்தது
பலநேரம்
துயரங்களில் சின்னது என்ன பெரியது என்ன
பாழாய்ப்போன கண் கலங்குகையிலெல்லாம்
தொண்டையடைத்து வழியும் சளியைச்
சிந்திஎறிந்தால் இறங்கும் பாரம்
இடையூறுஎன்னவோ குத்தும் திருகுதான் உழைப்பின் நெருப்பு தணலும் முகத்தில்
மிஞ்சிய ஒற்றைப் பொட்டாக
ஒற்றைக்கல் மூக்குத்தியின் சுடரிலே
இருள் கடந்த நாட்கள்தான் எத்தனை முத்து பெரியம்மா எது தவறினாலும்
மெனக்கெட்டு திருகு கழற்றி
வெள்ளிக்கிழமை எண்ணெய்க் குளியல்களில்
சிவப்புக்கல்லும் வெள்ளைக்கல்லும்
தனித்தனியாகவே தெரியுமளவு ஏழுகல்லையும்
காத்து வந்தாள்
அவள் பொறுமையின் பெருமைகளில் ஒன்றாகவும்
திறமையாகவும் சொல்லப்பட்ட அதையும்
பறித்துச் சென்றான் குடிகார பெரியப்பன்
குடல்…

கட்டைவிரல் கீழ் யானை

படம்
கண்முன்னால் நின்று கொண்டிருக்கும் யானை 
துதிக்கை தூக்கி பிளிறுமுன்
இதோ 
இந்தக்கட்டைவிரல் நுனியால் 
அழுத்திவிடலாம் போலத்தான் இருந்தது

*************************************************************
சுரைக்கொடி யோசிக்கவில்லை 
கூரை கிடைக்காது குப்பைகளோடு பிணைந்து படர
யாரோ ஒதுங்கிய இடமென்ற
கவலை 
அந்தப்பிஞ்சுக்குமில்லை

*************************************************************
ஏதாவது சொல்லியிருப்பாய் 
என்ற சமாதானத்தோடு புலன் தீட்டுகையில் 
மௌனத்தின் கல்லை அழுத்தி 
அடைத்துவிட்டுப் போனாய்
குகை இருளுக்கு வெளியே அதிரும் முழக்கங்கள் 
யார் கேட்க
இங்கோ ரும் ரும்மெனச் சுற்றுகிறது
மிச்சம் வைத்த மூச்சு

****************************************************************

முளைக்குச்சி உடைவதையும் 
கயிறு நைந்து அறுவதையும் 
யாரும் உவப்பதில்லை
சுற்றுக 
அனுமதிக்கப்பட்ட தூரம் மட்டும்
உன் கயிற்றின் விட்டம் உன் உலகு
எனதும் 
நாம் அடித்த முளைகளின் மேலிருக்கட்டும் 
எப்போதும்
ஒரு கண்
****************************************************************

எதைக்குறி பார்ப்பதென்றே
முடிவுசெய்ய விடாமல்
கரகரவென்று சுற்றும் சக்கரத்தின் முன் 
அம்புடன்
நிற்கிறது வாழ்க்…

தழையுணர்த்தும் சிறுவாழ்வு

படம்
உலுக்கி உலுக்கி ஆட்டியபோதும்
முருங்கைக்கிளை  சிரித்துக்கொண்டு நிமிர்ந்துவிடுகிறது பெருமழைசொரிந்த
நேற்றைய சலிப்பெங்கே என்றால்
நம் காலடியில் உதிர்ந்து பறக்கும்
இலைகளைச் சுட்டியபடி
ஓராயிரமாய்க் கிழிந்து தொங்கும்  வாழையிலையை வருடப்போகிறது
ஏறியிறங்கும் அணிலுக்கும்  ஒண்டு இடுக்கில் நார் சேர்க்கும் காக்கைக்கும்  ஆட்சேபமின்றி இடம்
மழையைக்குடிக்கும்
ஒளியைத்தின்னும்
இளவெயிலில் தழையுணர்த்தும்
சிறுவாழ்வு சொல்லிக்கொள்கிறோம்
எதற்கும் இடந்தரா எம்முடையதைப்  பெருவாழ்வென்று

சேதாரமிலா உபச்சாரம்

படம்
வருத்தங்களை உருக்கி உருக்கி 
இழையத்தட்டி நகாசு கிகாசு செய்து 
புத்திமதிகளை 
நாலு கல்லோ சலங்கையோ செதுக்கி 
அமுக்கி அமுக்கி ஓரம் மூடி 
அடக்கமாகப் பெட்டியிலிட்டு 
வைத்திருங்களேன்
செய்கூலி சேதாரத்தோடு நல்ல விலை போகும்
நல்ல விலை கொண்டு நாயை விற்பார்
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ
எதற்குப் பின் வருத்தத்திடம்
உபசார வார்த்தைகள்சாலையோர அங்காளம்மை-2

படம்
முழம் முழமாய்ச் சுற்றி வைத்த பந்துகளிலிருந்து
ஒரு கிள்ளு கூடத்தராது ஒயர்கூடையில் பதுக்கியபடி
தன்னை வணங்க காசு வீசும்
வாகனதாரிகளை மறித்துவிட்டு
பேரத்தின் எரிச்சலை வெற்றிலை எச்சிலாய்ப்புளிச்சிடும்
பேச்சியின் பேச்சும் கூவலும் 
அத்துணை சுவாரசியம்
எவரோ எப்போதோ சார்த்திய
மஞ்சள் சுங்கடியில் சான்னித்தியம் அருளும் 
அங்காளிக்கு