செவ்வாய், டிசம்பர் 27, 2011

எங்கேந்த அதெல்லாம்...?

பேபியக்கா
தைத்துவிடும் தாழம்பூச்சடை
காயும்வரை 
பின்னல் பிரிக்காது 
ஓசிக்குஞ்சல உலா...
யார்வீட்டுப்பெண்
சடங்கானாலும்
வெளியில் வரும் 
கெம்புக்கல் திருகுப்பூ ...
குத்துககாலுக்குள்
மடக்கி இழுக்கும் 
ஈருளியில் எரிச்சலாகி 
பேன்குத்தும் தாலாட்டில் 
செருகும் கண்கள் ...
ஏழுவீட்டுக் கூரையும் 
கட்டெறும்பும்
சேர்த்தரைத்த மருதாணி...
************
எந்த வரியும்
 புரியாது விழிக்கிறாள்
இந்நாளின் எழிலரசி      

பார்த்தேன்

சில
உணர்கொம்புகள்..
சில
கொம்புகள்...
சில
தலைகளுக்குமேல் ...
*************
சில பாம்புகள்
சில முதலைகள்
சில
முகங்களுக்குமேல்...
************
என் முகத்தில்
நேத்திர தடமே
இல்லைஎன்கிறது
தீர்ப்பு! 

திங்கள், டிசம்பர் 26, 2011

மண்வாசம்

இலை,மலர் ,....அரும்பு ,
உதிர்ந்ததா.....
விழுந்ததா,,,
காய்க்குமா ,கனியுமா..
விதைவருமா
அது
முளைவிடுமா .....
இறங்கிக்கொண்டேயிருக்கும்
வேர்
விசாரிப்பதேயில்லை....

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

அதுதான்...அதேதான்.....

நெற்றிமேல்
ஓட்டாஞ்சில்லும் 
அண்ணாந்த கழுத்துமாய் 
இச்சா...
இனியா...கூவி
பாண்டி கட்டங்கள்
தாண்டிக்கொண்டிருக்கும்
தமிழரசி அறியாள்
எதிகால பயிற்சி ஆட்டம்
இது என... 

உணர்வின் உணவு

வேண்டித்தான் இருக்கிறது
உள்ள்முக மோனத்தில்
உறைந்த
புத்தனுக்கும் 
நீ
புத்தன்தான்
நீ புத்தன்தான்
நான் உணர்ந்தேன்
என்றொரு
ஒப்புகைக்குரல்.....

கண்டு கொள்ளல்

தளும்பாக்கிணறும்
முகம் பார்க்கவாவது
அழைக்கிறது ....
இறைக்கச் சுரக்கா
ஊற்றும்
இனிப்பென்ற சொல்லில் பொங்கும் ! 

புதன், டிசம்பர் 21, 2011

ஆயுத எழுத்து

ம்ம் ...ம்ம்ஹும் ...
எழுத்து உணர்த்தா குறிப்பு
சொல்ல
வேண்டும்
முகக்குறிப்போ தெறிப்போ......
ம்ம் ....உதிராத
ஊமைப்பொழுதிலும்
உயிர்தரிக்கும் துணையின் 
ம்ம்க்கும் ...
நொடிக்குள் 
நொடித்துப் போகிறது  
உன் 
சாம்ராஜ்யம்!
முதலில் அவளும் அறியாள்
இதன் வலிமை.....!

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

எது நடந்ததோ

இந்த இடம்
metro ரயிலுக்கு .....
எங்கெங்கும் கண்ட
பாகப்பிரிவினை அறிவிப்புக்கு
சவால் விட்டது
தடுப்பின் ஓரத்தில்
எட்டிப்பார்த்த செடி....
இரைச்சலின் சாகரத்தில்
இது எப்படியோ ....
யோசனையில் கண்மூடியது
பாலத்தடி நாய்

சனி, டிசம்பர் 17, 2011

என்றோ மறைந்த முகம்

என்றோ மறைந்த முகம்

யாரோ வழிப்போக்கர்
திண்ணையில்
தவறவிட்ட
மஞ்சள்நிற கம்பளி
தன அலமாரித்தட்டில்
வைக்க ஒப்பாத
பள்ளி நண்பன்
சுப்ரமணியை பார்த்தேன்
கையூட்டுக் கைதுக்காக
முகம் மறைக்க முயன்ற
பத்திரிகைப் படத்தில்...


ஈரமான ஆரம்

புது மருமகள்
நகைப்பெட்டி நனைந்தது
போலிருந்தது ....
தன குடும்பத்தின் வியர்வையும்
கண்ணீரும்
இப்படித்தான் - விடாது
சுரப்பதாக சொன்னாள்...
தனித்தனி அடையாளம்
இல்லாவிடினும்
ஒவ்வொன்றுக்குள்ளும்
அவர்கள்
உண்ணாத பண்டங்கள்
உடுத்தாத துணிவகைகள்
போகாத சுற்றுலாக்கள்
கிராம்
கிராமாய்க்  குடியிருந்து
குரல் கொடுப்பதாகவும்
குறிப்பிட்டாள்..!
சலிப்போ
வெறுப்போ இல்லாது
ஒலித்த
அவள் குரல்தான்
உண்மையாக அச்சமூட்டியது!



வியாழன், டிசம்பர் 15, 2011

தேவையில்லா நிழல்

கால காலமாய்
கரிதின்று கரிதின்று
புளி உதிர்த்த
மரங்களில் இனி இலக்கமிட வேண்டாம்!
மரங்களே இலக்கு ......
தூங்குமூஞ்சி ,புங்கை
துளிர் கொஞ்சம்
பாடம் செய்க!
அளவோடு உள்ளே
அவரவர்க்கு 
குளிர் பரப்பி பறக்கும் 
வாகன வரிசையின் 
அகலத்தேவைக்காக
அகற்றவேண்டும் அனைத்தும்...
தாருக்குப் பதில்
தங்கம் ஓடும்
சாலையில்
நிழல் கருணை தேடும்
மனிதனின் நிழலும்
வாராது!
பெண் மனம் 


ஆல மரத்தின்
வேர் விழுதெல்லாம்
பிடுங்கி 
அரளியாக்கி நட்டாயிற்று 
குறுக்குப் பாதைக்கு 
அடக்கமாக....
ஒடித்து ஒடித்து நடவும் 
வசதி 
வெடித்து விழவும்
வாய்ப்பில்லை...
புதைத்தது போலவும் ஆச்சு 
பூப்பது போலவும் ஆச்சு
   

புதன், டிசம்பர் 14, 2011

இடிந்த வாசல்

காலம்கடந்து நிற்கும்
ஆசையில்
1972
என கட்டிய ஆண்டு
பொறித்துக்கட்டிய
முன்வீடு உடைத்து
காரை பெயரும் நடுவீட்டுக்குள்
கிடப்பவளின்
உறக்கம் ,கனவு,இளமை,குடும்பம்
யாவற்றின் மேலும்
ஓடிக்கொண்டிருந்தன
விரிவான சாலையின் வாகனங்கள்...
புல்டோசர் புதைத்த
அவள் வாழ்க்கையில்
புல் முளைக்காததை
உறுதிப்படுத்திப் போகிறது
தாழப் பறக்கும் விமானம்.....   

செவ்வாய், டிசம்பர் 13, 2011

தலைமுறை தாண்டியபின்னும் 
 
 
குரங்குபோல் 
உணர்வதைத் தடுக்க முடியவில்லை 
உன் குச்சியின் 
அசைவு தக 
குந்தியிருக்கும்போதும் 
குதித்தாடும்போதும் 
தொப்பி 
அணிந்தும் அகற்றியும் 
உன் அசைவில் அசையும்போதும் 
உன் உணர்வில் 
என் முகசசேட்டை பிறக்கும்போதும் .....
எப்போதோ 
இல்லை 
இப்போதும்  குரங்கென்றுதான்..... 
விலங்கியலார் கவனத்திற்கு

சிறகிருப்பதாக
சொல்லியிருந்தார்கள்
அதனால்
தான் பறவையாய்இருக்கலாம்
என நினைத்தது .
ஒருநாள்
இறகுகளால் கோர்த்த
சிறகைக்காணோம்
கல்லாய் இறுகிய
பாறை இருந்தது ....
சமயத்தில்
பறக்க முடிகிறதே என
பரிசோதித்தபோது
சக்கைகள் சேர்ந்த
தக்கை தெரிந்தது ....
வளர்ச்சியா?
மாற்றமா?
வளர்சிதைமாற்றமா?
   



அபி உலகம்-2
அபி இருப்பதில்லை  
அபி நாயே
அபி சனியனே
அபி எருமை
என்றெல்லாம்
விளிக்கும் வீடுகளில்
அபி இருப்பதில்லை....!
**************************
அவள்
எப்போதும் யாவர்க்கும்
அபிக்குட்டி
அபிச்செல்லம்
அபி பாப்பா 
அபிம்மா....
*****************************
அபியை ஆசீர்வதியுங்கள் 
சுடும் தொடுகையோ 
கொடும்பார்வையோ 
அவள் உடல் மேவாமல் 
குழந்தைமை திருடும் 
அவலம் படராமல் 
பத்திரமாய் 
பருவம் கடக்க....

திங்கள், டிசம்பர் 12, 2011

அபி உலகம்.......

அபிக்குப் புரியவேயில்லை
அக்கம்பக்கம் ,நட்புவட்டம்
ஊரிலிருந்து வரும்
உறவுகளைக்கூட
அவள்
ஆன்ட்டி என்றே
விளிக்கிறாள்.......
அம்மா அழைக்கும்
அத்தை ,சித்தி ,மாமி
பெரியம்மாக்களை
தான்
எப்போது சந்திக்கப் போகிறோம் என...
*******************************

அபிக்கு குழப்பம்
அம்மா போல
சூசன் ஆண்ட்டியும்
சூசன் ஆண்ட்டி போல
அம்மாவும்
புடவை வாங்கினார்கள்
தோடு,தொலைக்காடசி,
நாற்காலி,செருப்பு .....
எல்லாம் வாங்கினார்கள்......
ஆனால்...
தீபாவளி இனிப்பும் ....
கிறிஸ்துமஸ் மரமும்.....?
********************************
அபிக்குப் பிடிப்பதில்லை...
உடைந்துவிடும்
என்று பயமுறுத்தி
அம்மா பத்திரப்படுத்தும்
பொம்மையும் சாமானும்
பரிசளிக்கும்
எவரையும்....
********************************

சனி, டிசம்பர் 10, 2011

வெளியே போ தயவு செய்து

அலமாரி
திறக்கும் அவசரத்தில்
கவனிக்கவேயில்லை
உள்ளிருந்ததா...
உள்நுழைந்ததா என....

முதலில்
சந்தேகமாய்த்தான் இருந்தது
புடவை சித்திரம்
புறப்பட்ட பிறழ் காட்சியோ...

உயர்ந்திருந்த கைஉரசி
நான் நிஜம் என
தா(தீ)ண்டியது
பொன்வண்ண பட்டாம்பூச்சி

பெருவெளியான பாவனையில்
அலமாரி கதவு திறப்பிலே
சுற்றிப் படபடக்கும்
உன்னை என்ன சொல்லி விரட்டுவது?
சூ..சூ...?
நாப்தலின் மணக்கும்
அடுக்குகளுக்குள்
மூட மனமிலாதஎன்  தவிப்பும்
பறக்கும் நேரமும் புரியாமல்
சுற்றும் பட்டூ.....

திங்கள், டிசம்பர் 05, 2011

சருகு உலர்தல்

சென்ற பண்டிகையின்
புதுப்பட்டு
வாங்கி
நான்கே முறை அணிந்த
பவழ மோதிரம்
வங்கிக்கணக்கு ....
திசையெங்கும்
முளைக்கும் கரத்திலொன்று
இருளுக்குள் அமிழ்ந்து 
கனக்கும் 
முதியவள் 
முதுகு நிமிர்த்தி 
ஈரம் துடைக்க 
காத்திருக்கிறாள் 
கனவு தொலைந்த கண்களோடு...
***********************
ஏதிலியாய்க் 
கிடப்பவள் 
ஈரப் பிரக்ஞை
உதிர வேண்டியது 
முதல் வரம்.
இறப்பு....
இரண்டாவது. 

ஞாயிறு, டிசம்பர் 04, 2011

நூல் கயிறானது


உன் வினாக்கள் எல்லாம்
என்
விடை தேடியே பிறந்தன ....
***********

நானும் நம்பினேன்
நீயும் கூட !
உன் வினாக்களின் விடையே
நான் தருபவைதான் என...
*************

வினாக்களின்
நூல் நுனி
தொடர்ந்து
விடைஎடுப்பதே
வழக்கமானது......
*****************

நூல் திரிந்து
திரிந்து ...திரிந்து
கயிறானதைக்
கவனிக்கவேயில்லை 
நீ 
நானும் கூட ....
**************

இன்று 
வினாக்கள் 
சாட்டையாகவும் 
விடைகள் 
பம்பரமாகவும் 
சுழல்கின்றன....
************************ 

சனி, டிசம்பர் 03, 2011

டிசம்பர் மூன்று

மாற்றுத் திறனாளிகள் தினம் 
தவறாமல் 
அனுசரிக்க ஏற்பாடு 
செய்தது 
போபால் . 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...