செவ்வாய், அக்டோபர் 30, 2012

"பஞ்சம் பிழைக்க..."

21 10 12கல்கி இதழில் வெளியானது 



முதுகிலேறி,
எல்லைக்காவல் செய்த 
மண்குதிரைகள் ரெண்டும் 

 
தண்டவாளம் தாண்டி                                  
வண்ணமிழந்து சாய்ந்து கிடக்க ,
அவ்வழி வந்த 
விரைவுரெயிலில் தொற்றி,
கட்டிட மேஸ்திரியாகப்
போயிருக்கலாம் 
நொண்டிக்கருப்பு.. ...
வண்ணக்கொடிகளுடன் 
எல்லைக்கல் கட்டி நிற்கும் 
புதிய நகரில் 
கருவைக்காடும்,கருப்பு கோயிலும் 
தேடிக்கொண்டிருக்கிறான் 
அப்பனின் வேண்டுதலுக்காய்  
புதிய குதிரை 
நேர்ந்துவிட வந்தவன்.

வியாழன், அக்டோபர் 18, 2012

நான்... நான்... நான் ....

  

சின்ன அத்தை போல்  
செவிமடல் ..
வம்சமே ஏறிய  நெற்றிமேடு ..
பிசிறடிக்கும்  பல்வரிசை ,
தலைசாய்த்த உரையாடல் 
ரெண்டுமே தாத்தாவழி ...
வரிக்கு வரி "ம் "போடுவது 
ஆச்சியின் வழக்கம் ..
பெயரின் பின்வால் 
தலைமுறைச் சிந்தனைகளை 
வெட்டி ஒட்டியது !
ஆகிருதி கூட்டும் ஆடைகள் 
அவ்வப்போதைய நடைமுறைப்படி ...

"நான் "

என்னிலிருந்து பிரிவதுமில்லை 
என்னில் உறைவதுமில்லை...                              

வியாழன், அக்டோபர் 11, 2012

அபி உலகம் -10

சாலை தாண்டி ஓடித் திரும்பும் 
அபியைத் திட்டுவதா ,
பத்திரமாக மீண்டதற்கான 
பெருமூச்சோடு 
அணைத்துக் கொள்வதா 
எனத் திகைத்திருக்கும் 
அம்மாவை 
மேலும் குழப்புகிறாள் 
அந்தக் காலிமனையில் 
கொத்தித் தின்ன ஏதுமற்று 
ஏமாந்து திரும்பும் 
காக்கைகளிடம் 
காட்பரிஸ் பகிர்ந்து 
திரும்பும் அபி...

செவ்வாய், அக்டோபர் 09, 2012

ரெட்டை வரி நோட்டு




இருளின் முற்றுப்புள்ளி 
வெளிச்சத்தின் 
தொடக்கப் புள்ளியாய் 
இருந்திருக்கலாம் .
ஆனால்..
இருளின் நீள அகலத்துக்குள் 
இடுங்கிப்போன 
வெளிச்சத்தின் முற்றுப்புள்ளியும் 
அதுவானதால் ,
காற் புள்ளிகளோடு  கதைத்தபடி 
இருளின் வரி நீண்டு கொண்டே .....
 உங்களால் 
அதனிடம் ,முற்றுப்புள்ளியை 
நினைவூட்டமுடியுமா ?

செவ்வாய், அக்டோபர் 02, 2012

ஒரு குடம் தண்ணி ஊத்தி....

கீற்று இணையத்தில் இன்று 

                                                                  

கவிழ்ந்த தென்னங்கீற்றாய் 
விரிந்த பஞ்சுத்தலை கோதி
கால் நீட்டிக் கிடக்கும் 
கிழவியைப் 
போகவரப் பார்த்திருக்கிறேன்...
ஒருவேளை 
இவள் அறியக் கூடுமென ,
ஒருநாள் கேட்டேன் 
புதிய வீட்டின் 
வாசலோரப் பூஞ்செடிகள் 
எத்தனைகுடம் 
நீரூற்றியும் 
ஒரு பூ கூட பூக்காததன் 
மர்மத்தை..!
தளும்பத் தளும்ப 
நீர் நிறைந்திருந்த 
குளத்துக்கு
குடங்கள் போதாதென 
வன்மமாய்ச் சிரித்தாள்...
மனநிலை பிறழ்ந்தவளோ
என நழுவியபோது 
பின்னால் சொல்லிக்கொண்டிருந்தாள்
வீடுகளாகிவிட்ட 
குளக்கரையில்,வெகுகாலமாய் 
கூட்டிய செங்கல்லினுள் சிற்றகலாகக் 
காவலிருந்த 
பேச்சி 
தான்தானென்று...!

MY SONG.... MY STORY..-1


மீள்பகிர்வு 
                                                     

தேநீர்க்கடையின் 
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி 
நீங்கள் கூடியிருக்கையில் 
மௌனமாகச் சில்லறை தந்து 
விலகிப்போகும் 
அவனும் ஒரு பாடலாசிரியன் என 
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு 
அவன் எழுதிய வரிகளை 
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான் 
வெற்றிக்குப்பின்னான 
ஒரு நேர்முகத்தில் 
தான் தாண்டியதான சவால்களில் 
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
 ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய் 
வந்த பாடலை 
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும் 
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை 
பெயர் சொல்லாமல் யாரேனும் 
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும் 
இருப்பில் இல்லாததாய் 
வானொலிகளும் மறுத்துவிட்ட 
அவன் பாடலை நீங்கள் 
அறிவீர்களா?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...