வெள்ளி, பிப்ரவரி 22, 2013

அபி உலகம் -15


வாசல் வேம்பு வந்த கதை...
நீ வளத்தியா தாத்தா...?
தொட்டி ரோஜா 

தன சொப்பு நீரால் வளர்க்கும்
அபியிடம் எப்படிச் சொல்வது...?
"காக்கா போட்ட விதைம்மா..."
ஏன் போட்டுச்சு..?
வேப்பம் பழம் சாப்ப்ட்டுச்சா..அதான்..
அப்போ ஆப்பிள் குடுத்திருக்கலாம்ம்ம்ல ...
ம்ம்ம்ம் விழுந்த
நேரம் தாத்தாவும் நினைத்தார்
ஆப்பிள் மரம் பால்கனியில்
நீட்டும் கனியை...
***********************************
பாட்டியிடம் திருடிய வடையைக்
காகம் தவற விட்டால்
வடைமரம் முளைக்குமா...?

நூடுல்ஸ் எதில் காய்க்கும்..?

சாக்லேட் காயா பழமா...?
அபியின் கேள்விகளுக்கு
விடை அறிந்தால்
தாத்தாவைத் தொடர்பு கொள்ளுங்கள்...



வியாழன், பிப்ரவரி 21, 2013

அபி உலகம் -14




அபி கடல் பார்த்தாள் ..
"எவ்ளோ ஓஓஓஓ  ...தண்ணி...
யாரும்மா..ஊத்தினா...."
"ம்ம்ம் ...கடவுள்..."
"நீயும் அவங்கம்மா
மாதிரி இருக்கலாம்மா..."
டம்ளர் தண்ணீர்
கவிழ்த்தாலே குட்டு வாங்கும்
குட்டிக் கடவுளின் ஆதங்கம்...
****************************
கவனமாய்
முள் நீக்குகிறாள் அம்மா .
ஏன்மா..?
தொண்டையிலே மாட்டிக்கும் அபி.....
மாட்டிக்கிட்டா..
ம்ம்ம்ம் ..செத்துப்போய்டுவோம்..
எரிச்சல் தொனியில்
இன்னொரு கவளமும்
இன்னொரு நிமிடமும்
கடந்தபின் ...
"இந்த மீனோட அம்மா
இத சொல்லவே இல்லியாம்மா 
உன்ன மாதிரி..."
துண்டு மீன் தட்டில்
துள்ளியது மாதிரி இருந்தது !

புதன், பிப்ரவரி 20, 2013

சுயம் ...சுலபம்...




நானற்ற "நான்"ஆக
நான் இருந்தாலும்
"நீ"யற்ற  நீ
என்னுள் நிறைந்தாலும்
நான் நானாக இருத்தலும்
நீ நீயாக இருத்தலுமே
நாம்......

பால்வெளியின் சொற்களில்
"நீ" நான் ஆவதில்லை...
நான் "நீ" ஆவதில்லை
நான்-
நான் என்பது- என்னை !
"நீ""நான்" என்பது
உன்னை!

"நீ"யும் "நான்"உம
உலகு
சுலபமாகச் சுட்ட ஏதுவாக
"நாம்"....

செவ்வாய், பிப்ரவரி 19, 2013

வன தேவதா





பழுத்த இலைகளில்
பாதம்புதைய நடந்துகொண்டிருக்கிறேன் ..
இருள் கவிந்த வனத்தில்
என்றோ கவிந்ததன் எச்சமான
ஒளியின் சாயலில்
நடக்கிறேன்...
செவியுரசும் விழுது ...
வண்ணமோ வடிவமோ
வாழிடமோ காட்டாது
மணத்தால்
உடன் நடந்த பூ..
உணர்ந்தறியாக் குளிர்மையோடு
கால் நனைத்த நீர்ப் பெருக்கு,
தக்க உதாரணங்களோடு
சேகரித்தபடியே நடக்கிறேன்......
மழையுதிரும் மாலையிலோ,
நிலா வழியும் இராமணலிலோ
நாம் நடக்கையில்
கதைக்கத் தோதாக இருக்குமென...


ஒருவேளை.....
ஒளியின் தடம் தீண்டாமலே
என் பயணம் முடியவும் கூடும் ..
நெடுக அழைத்தபடி
நீ வரும் நாளில்
இந்தப் பழுப்புகள்
சருகாய் மொடமொடத்தால்
அதன் வழியே
நீ கேட்கலாம் என் சேகரங்களை.....
.
என் சிறகில் ஒளியிருந்ததைச்
சொல்லி அழாதே தயவுசெய்து
....!

திங்கள், பிப்ரவரி 18, 2013

அபி உலகம் -13




"தோஸ் கலர் டெஸ் (ரோஸ் கலர் டிரஸ் )
போடும் பள்ளிக்கு மட்டுமே போவேன் "
அபியின் தீர்மானத்தை
அரும்பாடுபட்டு இடம் பிடித்த
பள்ளி நிர்வாகத்திடம்
சொல்வது எப்படி...
    *********************
தோழிB.தர்ஷினி
 "B"பிரிவில் சேர்ந்துவிட்டாள்
 "R" அபி மட்டும்
ஏன் "C" பிரிவுக்குப் போகவேண்டும்
அபி
அப்பாவுக்கு 
Cயில் தொடங்கும் பெயர்
தேடிக்
கொண்டிருக்கிறாள் 
பிரிவு மாற்றுவதைவிட
பெயர் மாற்றுவது சுலபமாம்

***********************
அபி அப்பாவின் தற்போதைய கவலைகள்
.....

ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

அபி உலகம் -12

அபியின் புதிய 
அணிகலன் 
வழக்கம்போல 
பொம்மைப்பெண் காதில்,....
பதறிய அம்மா 
"உலகமே தெரியலியேடி உனக்கு..
எனக் கலங்க ,
ஓடிப் போய் 
தாத்தாவின் புதுக் கண்ணாடியோடு 
வந்தாள் அபி.
"இதப் போட்டுக்கறேம்மா 
இனிமே செரியாயிடும் ......
*********************
 தொண தொவென பேசியபடி 
சுற்றிக் கொண்டிருந்தாள் அபி.
"நானே கவலையா 
இருக்கேன்...தெரியுதா உனக்கு ?
சும்மா இரு...."
...............
இருநொடிக்குப்பின் 
"கவலைன்னா என்னம்மா...?
சும்மா இருந்துவிட்டாள் 
அம்மா.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...