சனி, மார்ச் 30, 2013

சருகு துளிர்க்கும்



சந்தேகங்கள்
எல்லா நேரங்களிலும்
தீர்ந்துவிடுவதில்லை..


முயற்சிகளில்
உதிர்ந்து கொண்டே இருக்கின்றன
ஞான வனத்தின் பழுத்த இலைகள் ...


அவை சருகாகி
அலைக்கழிவதும்,மிதிபடுவதும்
ஆமோதிப்பின் தலையசைப்புகளாய்
மொழிபெயர்க்கப்படுகின்றன ....


அண்ணாந்து கொண்டிருக்கும்
நீ
துளிர் தரிசனத்தில் ...
நான்

சருகைப் பெருக்கியபடி ....

நீரோடை மட்டும்
எப்போதுமே சுழித்தோடுகிறது...
குமிழிடும் வட்டம்
அமிழ்த்திக் கொள்ளும் நாள் வரை
நாம்
சருகோ..தளிரோ...

துளிர்க்கவோ...... உதிரவோ .....


வெள்ளி, மார்ச் 29, 2013

கோள் தாண்டி வந்தவள்

 













இப்படி ஒரு வினாவை
நான் எதிர்கொண்டதேயில்லை...


கனவு என்றால் என்ன...? 


சொல்லோ ,பொருளோ புரியா வினாவோ,
அங்கதமோ எனக் கடக்க முடியாவண்ணம்
உன் குரல் உறுதியாக மீண்டும்...


கனவு என்றால் என்ன....


உலகாயத விடையா ,தத்துவமா,
மருத்துவமா,ஆன்மீகமா
எப்படி விடையிறுப்பது ..?


சொற்களைத் தேடினேன்..
மிரட்சியில் தலைதெறித்தது
அவைதானாம்..


கோடிட்ட இடங்களாகிவிட்டன
என் கவிதைகள் ....


கையடக்கமான தலையணை
நழுவிக் கரைந்தது...


கனவின் தடம் அறியாதவளே
நீ
உறக்கம் தொலைத்தாயா...
உறங்கியே தொலைந்தாயா...


அப்பொழுதுகளிலும்
கனவினை
அம்மாவின் சீலைத் துண்டாகக்
கைக்குள் சுருட்டியே
கிடத்தலன்றோ  மனித வழமை...


ம்ம்ம்ம்ம்
உன் ஊரை நான் கேட்கவேயில்லை...
.

சனி, மார்ச் 23, 2013

பொருத்துக!(முடிந்தால்...)





விதைத்து,முளைத்து,
உயர்ந்து,விரிந்து,
இலையுதிர்க்கத் தயாராகும் என்மரம்
இப்போதுதான்
உன்னால் நடப்பட்டிருக்கிறது...

கீற்று கீற்றாய் வளர்ந்து
பாலொளி பரப்பி
தேய்பிறை அச்சத்தோடே
நிற்கும் உன் நிறைமதி
என் வானில்
நித்ய பூரண சந்திரன் குழைத்த குளிர்...

கிழக்கும் மேற்கும்
மாறி மாறிப் பின்னும்
சுழல்கிறது உன் புவியில்..
செங்கதிர்ச் சிரிப்போடு
என் கிழக்கும் 
ஆரஞ்சுப் பந்து உருண்டோடும்
மேற்கும் புடைசூழ்ந்த இருக்கை எனது...

இணையில்லையே ..?
இணை தான் இணையுமா
என்ற லட்சம்கோடி மதிப்பிலான
வினா முற்றத்தில் கிடக்கிறது......

இது பால்வீதியின் மூன்றாவது வீடு !

வெள்ளி, மார்ச் 22, 2013

வரம் மறந்த கடவுளும் ஒரு யாசகியும்


"இப்படியாக இரு "
உன் வலது உள்ளங்கை
உயர்கையில்
உரத்துச் சொன்னாயோ...
முணுமுணுத்தாயோ.....
நான்
இப்படித்தான் இருக்கிறேன்.
நீ சொன்ன :இப்படி"
இதுதானா?
நெற்றி வியர்வையாய்
சுரந்து பெருகிய
சலிப்பின் துளிகளை
வழித்து ..வழித்து ..
அந்தரத்தில் எறிந்துவிட்டு
இப்படியாகவே-இருக்கிறேன்...
சலிப்பு பெருகி..பெருகி
சூழ்ந்த நீர்ப்பரப்பின்
மேலொரு தக்கையாகவும்
நான்
இப்படித்தான் இருக்கிறேன்..
உன் வரம்
உனக்காவது நினைவில் இருந்திருக்கலாம்
.

செவ்வாய், மார்ச் 05, 2013

இங்கும் வருகிறாளா ?


உதயம் உவப்பாய்த்தான்
தொடங்குகிறது....
உன் கருணையின் ரேகை போல்
இதமான உஷ்ணமும்
ஆரஞ்சு வெளிச்சச்சிதறலுமாய் .....!

நேரப் பந்தயத்தை
நிறுத்தி
முள்ஒடித்துப் போடேன் ..

காம்போடு விடைகொண்டு
தூசுபோல்
காற்றின் திசையில் -
மலர் திரிந்து மிதந்து அலைகிறது .....
ஒற்றை இதழின்
 நடுக்கம் போதாதா
 உன் உறக்கம் கெட

இற்றுப் போவதன் வலி அறியாமல்
என்ன பரிபாலனமோ ....

காவல் என்றொரு நம்பிக்கை

மின்னுவதற்கு நேரமிலாததால்
கனவுகளுக்கு
நட்சத்திரப் பூட்டு ......


சிறகடிக்க வாய்ப்பிலாத
கவிதை
வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளுக்குள் ....


கரைய முடியாத
கற்பனையை
மழைத் துளிகளின் தண்மையிடுக்கில்
.............
 பூட்டிவிட்டேன்.... ம்ம்ம்ம்ம்
இருப்பிடக் குறிப்புகள்
இதோ பொதுவெளியில் .....
இலக்கமிலாச் சாவி
இருப்போர் வரலாம்
புதையல் வேட்டைக்கு.....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...