புதன், ஜூன் 12, 2013

என் தொடக்கமும் தொடர்ச்சியும்


ஒளியைக் கிள்ளி
உதட்டில் பொருத்திக் கொண்ட
அந்தக் கணத்திலேயே
உன் கண்களில்
தீச் சுரந்தது
எனக்குத் தெரியும் ...!



இருள்
உன்னை அவித்துவிடும்
என மனப்பாடம்
சொல்லித் தந்தாய்...
எனக்கு மையிட்டுக் கொள்ள
அதைக் கைப்பற்றினேன் ....


திரைச் சீலைகளின்
பின்னிருந்து பேச மறுத்து
அவற்றையும்
சேர்த்துச் சுமந்தபடி
சுழன்றாடும் என்
பாத சரங்கள் உன்மேல்
விழும் இடித் துண்டுகள்
எனக் கதைக்கிறது
நூற்றாண்டுகள் கடந்த உன்
துர்க்கனவின் பாடல்

செவ்வாய், ஜூன் 11, 2013

ஆறுதல் நன்றன்று

ஒரு பேரன்பை ,
ஒரு புன்னகையை,
ஒரு முத்தத்தை,
ஒரு பரவசத்தை,
ஒரு பூக்கணத்தை ,
ஒரு  மகிழ்பொழுதை ,
ஒரு பாடலை,
ஒரு கவிதையைக்
கொண்டாடும் -அதே கனத்தோடு ,
ஒரு புறக்கணிப்பை,
ஒரு துரோகத்தை,
ஒரு சீற்றத்தை,
ஒரு சீண்டலை,
ஒரு துன்பத்தை,
ஒரு விம்மலையும்
தாங்க முடிந்தால்
என்ன சொல்வீர்,.....

***************************


பச்சைத் தேநீர்
இன்னும் ஒரு மிடறு பாக்கியிருப்பதால்
நீ எதி
ர்பார்க்கும்
விடை சொல்வது கடினம்
....

ஞாயிறு, ஜூன் 09, 2013

புத்தனும் நானும்


வனமலர்கள் சில மலரக் கூடும்
வெடிப்பெலாம் குழம்ப
குளம் நிறையக் கூடும்...
ஓடியாச் சுள்ளிகளோடு
உயர்ந்து நிற்கும் மரம்
பசிய துளிர்களின் வாசத்தைத்
தானே தலையசைத்து
ரசிக்கக்கூடும் ....
விசும்பின் துளி வீழும்
தேவகணத்தைத் தொடரும்


இந்த வரிசையில்
தேவனுடையதோ-
சாத்தானுடையதோவான
கனியும் கிடைக்குமென ...


கிடைக்குமென
காத்திருக்கிறான்
பாசி படர்ந்த புத்தன்.....
பாசி
ஈரத்தின் விளைவல்லவென
நோன்பு தொடங்கு
முன்  யுகத்திலேயே
உபதேசித்தது நினைவிருக்கிறது.

வெள்ளி, ஜூன் 07, 2013

எச்சத்தால் ஆனது


 


 அன்பு ஒரு துளி
ஆசை ஒரு துளி
சினம் ஒரு துளி
வருத்தம் ஒரு துளி
அறிவு ஒரு துளி
கயமை ஒரு துளி
காதல் ஒரு துளி
கற்பனை ஒரு துளி
காமம் ஒரு துளி
வேகம் ஒரு துளி
விவேகம் ஒரு துளி
ஞானம் ஒரு துளி
மடமை ஒரு துளி
ஊக்கம் ஒரு துளி
சோம்பல் ஒரு துளி
முயற்சி ஒரு துளி
வக்கிரம்,உக்கிரம்,
தயை ,தாராளம் ,
இரக்கம் .....ஒருஒரு துளி
......
என்ன ஆயிற்றா ?
இன்னும் கொஞ்சம் விடலாம் "
"விடு..விடு..எதையாவது விடு ...!"
.......
அவன் கைக் குடுவையே
நீ..நான்....

வியாழன், ஜூன் 06, 2013

எனக்குத் தெரியாத நான்


அலைச் சலனத்தில்
துள்ளி நழுவும் சிறு மீனா...
மிதவைத் தெப்பத்தில்
சேர்ந்த குச்சியா....
அதையும் செலுத்தவல்ல
துடுப்பா ...

கரையோரம் நின்று
ஈரத்தில் ஊறும் வேரா ,
உதிரும் துளிரா ..
நீலமும் பச்சையுமிலா
நிறச் சேர்க்கையா ...
எங்கோ இருக்கிறேன் !
எங்கிருக்கிறேன் ....?
இருக்கிறேனா ...?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...