சனி, ஆகஸ்ட் 29, 2015

உங்கள் மழையும், எங்கள் மழையும் ..


இங்கேதான் 
நேற்று பத்து செ மீ மழை அளவு 
பதிவானதாகக் குறிப்பிடுகிறார்கள் 
நீங்களும் நாங்களும் 
இதே ஊரில்தான்  இருக்கிறோம் .

முத்தங்களை நினைவூட்டிய 
தழுவிடத் தோள் தேடிய 
நறுமணத் தேநீரோ,
கரகரப்பும் சூடும் நிரம்பிய 
கொறிப்பான்களோ 
ஏன்
குளிரின் ஆவி பறக்கும் 
ஐஸ்க்ரீமோ ஏந்திய    மழை 
உங்களுடையது 
அது ஜன்னலின் கம்பிகளுக்கு வெளியிலோ 
இறுக மூடிய கண்ணாடிகளுக்கு அப்பாலோ 
வழிந்த மழை 

எங்களுடையது 
கூரைப்பொத்தல்வழி 
குடியிருப்புகளுக்குள் பொழிந்த மழை 
அது 
தள்ளுவண்டிகளை ஏறக்கட்டி 
நாற்றுமுடிகளையும் 
சாந்துச் சட்டிகளையும்  கைவிட்டு 
போர்த்தித் திரும்பிய சவ்வுத்தாள்வழி 
வழிந்தோடி 
அடுப்புகளை அணைத்த மழை 

வயதான, நோயுற்ற  முக்கியஸ்தனின் 
வாழ்க்கைக்குறிப்பு போல 
எப்போதும் தயாராக இருக்கலாம் 
உங்கள் மழைக்கவிதைகள் 
எங்கள் பிரார்த்தனைகள் 
விதைநெல்லோடு இருப்பதுபோல் 
அரிவாளோடு இருப்பதில்லை 

பயிர் மூழ்கியது என்ற செய்தி வந்தால் 
நகை வீடு எனச் சிலதையும் 
சேர்த்துப் படித்துக்கொள்ளப் பழக்கமுண்டா 
 இல்லைதானே 
அதனால்தான் சொல்கிறேன் 
உங்கள் மழையும் எங்கள் மழையும் ஒன்றல்ல

2015-ஜூலை-செப்டம்பர் நற்றிணை  இதழில் இடம் பெற்ற கவிதை 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...