ஞாயிறு, அக்டோபர் 11, 2015

பெரிய பள்ளம்



தோரணவாயில்,கட்அவுட்,பேனர்
எந்த இலக்கணப் பிழையுமின்றி
சகல ஆடம்பரங்களோடும்
நடந்து முடிந்தது திறப்பு(திரு)விழா

என் ஆயுசுல இவ்ளோ பெரிய
பாலம் பார்த்ததேயில்லை
வியப்புடன்
பேரனோடு வேடிக்கை பார்க்க வந்தார்
பக்கத்து ஊர் முருகேசன்

நுரை ததும்பி ஓடிய காலத்து
வெள்ளத்தில்
ஆடு மாடு ஏன் மனிதர்களும்
அடித்துச் செல்லப்பட்ட கதையும்
அளவான பெருக்கில்
ஆறு குடைந்து நீந்திய பெருமையும்
பேரனோடு பேசிக்கொண்டே
வந்து சேர்ந்தார்




பாலம் கட்டிய நீண்ட வருடங்களுக்குள்
வட்டம் மாவட்டம்  ஆனகதையும்
மாற்றுப்பாதையில்
கும்பகோணம் பில்ட்டர் காபி ,பரோட்டா கடைகளோடு
வாகனப்பழுது நீக்கும் கடைவரை
ஒவ்வொன்றாய்
முளைத்து புதிய நகர் வந்த கதையும் 
மனதுக்குள் தனியே ஓட
பாலத்தின் மேல் நின்று பார்க்கையில்
என்னவோ பரவசம்தான் அவருக்கு

கீழே என்ன தாத்தா
இவ்ளோ பெரிய பள்ளம் என்றான்
ஆறுகளின் வரலாறு அறியா
பேரன்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...