வியாழன், ஜனவரி 21, 2016

ஜனவரிப்பூக்கள்-4

உறைந்து போயிருக்கும்
வாழ்விலிருந்து
வெடித்துக்கிளம்பும் விதை
அதோ மே...மே என்றபடி
இழுத்துச் செல்லப்படும்
ஆட்டுக்குட்டியின்
எச்சில் குரலிலிருந்து விழுகிறது

******************************************
எனக்குத் தெரியாதவை
எவையென்று உனக்குத்
தெரிந்திருந்தது
என்னால் இயலாதவை
எவையென்று உனக்குத்
தெரிந்திருந்தது
எனக்குப் புரியாதவை கூட
உனக்குத்தெரிந்திருந்தது

அப்புறம்...
அவ்வளவுதான்
****************************************
செம்பருத்தி ஒன்று 
ஆடிக்கொண்டிருக்கும்
தருணத்தில்
நீயாகவே உணர்கிறாயா
வா
கை தட்டிக்கொள்ளலாம்
*********************************************
நிசமாகவே கோளாறு
என்றுதான் நம்புகிறார்கள்
கல் தூக்கும்
கையை இறக்கி விட்டால்

ஜனவரிப்பூக்கள் -3

எழுது
அழி
எழுது
திருத்து
எழுது
இரு
எழுது
போ
எழுது
திரி
எழுது
முடி
எழுது
தொடங்கு

*************************************
நிற்கவும் இருக்கவும்
பறக்கவும் துறக்கவும்
கரும்பு சக்கையாய்
உலரவும் பிறவி
இடையில்
ஒய்யாரம்

************************************
நீண்ட பயணத்தில்
சுமைகளை
உடைமையெனக் கொண்டாடினாள்
உன்னுடையது எல்லாம்
உன்னுடையது அல்ல
என வாசித்தபோது
உறுப்புகளாக மாறிவிட்டிருந்தன சுமைகள்
சுமைகளை இறக்க
உறுப்புகளைத ்துறத்தல்
உசிதமில்லை

சுமைகள் அங்கங்களாவது
குறித்து நீங்கள் உரையாடியபோது
அவள் கொண்ட மீள்நினைவே இது
*******************************************************
சிறு கோடுதான்
நீ
தேடியதும்
நான் வரைந்ததும்
அடையாளம் தெரியவில்லை அவ்வளவுதான்
*****************************************************
வட்டமாக இருப்பதும்
புள்ளியாகத் தேய்வதும்
இருப்பேதானா 
பார்வையா
***********************************
ஆறுதலான இசையோடு
வாழவிடு தேவனே
முள்கிரீடங்களை
நீ
சொல்லுமிடம் வரை
சுமக்கிறேன்

ஜனவரிப்பூக்கள் -2

முள்ளிருக்கிறது என்ற நினைப்பில்
ஓரக்கண் பார்வையோடு கடந்துவிட்ட
ஆரஞ்சுப்பூங்கொத்தைத் தயங்காது 
வளைத்துப்பறித்து
முகத்தோடு உரசியபடி
ஏழாவதுவயதில்போல
மென்குதிநடையோடு போக
இந்த முகம்தான் தடைஎனில்
கொஞ்சம்நில்லுங்கள்
சற்றேதிருகி எடுத்துத் தந்துவிடுகிறேன்


************************************************
உலர்ந்த கேள்விகள் 
கொடிக்கம்பியில் சேர்ந்துகொண்டேபோகின்றன
கிளிப்பே துணை
கிளியை நினைத்தீர்களா என்ன
உங்கள் நினைப்பிலும்
இந்தப்பிழைப்பிலும் வீசுகிறதுகாற்று


*******************************************
வாய்மூடி நகர்வதில் பிழையில்லை 
உனக்குத் தெரியாது 
உனக்குப் புரியவில்லை 
என்று சமாதானித்துக் கொள்வதில்
சிரமமில்லை
உதட்டைச்சுழித்தபடி மட்டும்போகாதே

***********************************************
நொண்டிக்கொண்டிருந்த அந்த நாய்க்குட்டி
அப்படியாகவே நினைவின் சித்திரத்தில்
தங்கிவிட்டது
அபூர்வ விருந்தாளியாக வந்தவருக்கு
அதுவோ 
கால்ஆறி,வயதேறி ,நுரைதள்ளி
வண்டியிலும் ஏறிப்போய்விட்டது
விசாரித்தபோது
துரத்திய நாள்தவிர்த்து
சொல்லிமுடித்தோம்

********************************************************
மறந்திருக்கும் எனநினைத்ததை
நினைத்திருப்பதும்
நினைவிருக்கும் எனநம்பியதை
மறந்திருப்பதும்
சுவாரசியம்.

அசுவாரசியமாகவும் இருக்கலாம்
***************************************************


செவ்வாய், ஜனவரி 12, 2016

ஜனவரிப் பூக்கள் 1

ஆக
அந்த வண்ணத்துப்பூச்சியை
நீ
தூரிகையோடுதான்
துரத்துகிறாய்
*****************************
அமர முற்பட்டபோது
கிளைகள்
ஒடிந்ததை அறிந்த
பறவை
பறக்க முற்பட்டபோது
சிறகு உதிர்ந்ததை
உணர்ந்தது

*****************************
வானத்தின் நீலமும்
நீ இறைத்ததாகவே
நம்புகிறேன்
ஊமத்தம்பூ 
நீட்டிய கரம் பற்றிக்கொள்

****************************
உள்ளம் என்பது
இப்படித் ததும்பும் குளமா
மீனாகக்கிடந்து
அறியாது போனேனே

******************************
நிறைய பலூன்கள்
நிறைய காற்றாடிகள்
சந்தேகமே இல்லை
உங்கள் உலகம்
திருவிழா கொண்டாடியபடியே இருக்கிறது
நாங்கள் தான் அறியவில்லை

************************************
எங்கிருந்தோ ஒரு கேள்வி
உரித்த பூண்டுத்தோல் போலவே வீசிப்போகிறாய்
விழுந்த இடம்
உறுதி செய்யாமல்

**************************************
யாருடைய தேன்மொழிகளோ
யாருடைய நஸ்ரியாக்களோ
யாருக்கேனும்
கீதா அக்காகளாகி
ஆறுதல் சொல்கிறார்கள்
அன்பு செய்கிறார்கள்

**************************************
இரண்டு நாட்கள்
ஆகிவிட்டால்
சந்திரன் சுட்டெரித்த வதையும்
மறந்து விடலாம்

*********************************

மூன்று வேளையும்
நிலாவைப் பிட்டுத்தின்று
இரண்டு வேளையும்
நட்சத்திரம்
கரைத்துக் குடிப்பவனிடம்
ஆரஞ்சு மிட்டாய்
விற்கப் பார்க்கிறாய்
அஜீரண மருந்தை
எழுதி அனுப்பாமல் பின்னே

************************************
ஒரு காகிதக்கோப்பையை
ஒரு நெகிழிப்பையை
ஒரு குளிர்பானக்குப்பியை
ஒரு மலிவுவிலை எழுதுகோலை
மட்டுமே
பயன்கொண்டு எறிவதாக
இவற்றின் வருகைக்குப்பின்னே
இத்தத்துவம் அறிந்ததாக
நினைத்தால்
நீ பாவம்
அல்லது பாவி



வியாழன், ஜனவரி 07, 2016

துரத்தும் திரவம்


தொட்டி நிரம்பி நீர்வழியத்
தொடங்கியிருந்தது
நீர்த்தாரை எத்தனை அழகு
எத்தனை உயிர்ப்பு
என்னவோ எங்குவிழும்சொட்டும்
கையிலேந்த அழைக்கும்
குவளையால் செடிகளுக்கு
வார்த்தபோதும்
வாய்க்கால்வழி வரப்புவழி
பயிர்நனைத்தபோதும்
ஒவ்வொரு துளியின்சலனமும்
என்வழி உயிர்வளர்ப்பதான பெருமை
தும்பைமேல் வீற்றிருந்த துளியை
மெல்லஇடறிவிட்டுப்போகையில்
யாதொரு குற்றமும் இருந்ததில்லை
வழியும்நீர்
அழிவின்நிழல் போல்
ஆயிரம்ஆயிரம் கிளைகொண்டு
பெருகிப்படர்ந்து
அச்சத்தின் சிறையில் தள்ளுகிறது
இனிஒருநாளும்
செடிகளுக்கு நீர்வார்த்தல்
இனிய
மாலையின் நிகழ்வாயிருக்கப்
போவதில்லைஎனக்கு
விக்கித்து நிற்கும் கையிலிருந்து
நீர்க்குவளை வாங்கி
வார்க்கிறாள் கண்ணம்மா
நீர்கொண்டோடிய உறவின் முகங்கள்
நீரில் தெரியாதபடி
கண்ணை இறுக்கிக்கட்டிக்கொள்
என்னைப்போல் என்றபடி

புதன், ஜனவரி 06, 2016

நிறமாலை


அடிவயிற்றிலிருந்து
குரலெடுத்து அன்னையின் மரணத்தில்
கட்டியழுத சித்தியின் 
கத்தரிப்பூ சேலை நிறமா
வளர்வதற்கெல்லாம் முன்பு
பிள்ளைகள்
உருட்டிப்போடச்சொல்லி உண்ட
பொட்டுக்கடலைத் துவையல் சோற்றின்
மங்கிய சந்தன நிறமா
ஊசுட்டேரிக்கரையில்
தருவதான பாவனையில்
தாய்க்குக்காட்டி தான்ஊட்டிக்கொண்ட
குழந்தையின் பிஸ்தா பனிக்கூழ் நிறமா
பாராமல் கடந்துசெல்லும்
போக்கு தாளாமல்
நீலத்தையும் பச்சையையும்
துறந்து நிறமிலியாய்
ஆர்ப்பரிக்கும் பௌர்ணமி அலைநிறமா

அன்பின் கதிர் என்ன நிறம் 

அவளுடையது

வீட்டைச் சுமந்து கொண்டே
பூங்காவுக்குப் போனாள்
வீட்டைச் சுமந்துகொண்டே
கடைக்குப்போனாள்
வீட்டைச் சுமந்துகொண்டே 
மருத்துவமனை போனாள்
வீட்டைச்சுமந்துகொண்டே
திருமணத்துக்கு,திருவிழாவுக்கு,
ஆலயத்துக்கு,அலுவலுக்கு...
வீட்டுக்கு
பூ,காற்று,புத்தகம்,மருந்து,
புன்னகை,பரிகாசம்,
பரிசு,ஆசி,ஊதியம்
எல்லாம் கிடைக்கிறது
வீட்டுக்குக் கிடைத்தால்
உனக்குத்தானே

நடப்பு

உலகம் வெகுஅழகானது
மக்கள் யாவரும் மகிழ்வோடு
இருக்கிறார்கள்
வேண்டுதல் வேண்டாமை இன்றி
கைகுலுக்குகிறார்கள்
பரிசுதருகிறார்கள்
அணைத்து விடைபெறுகிறார்கள்
ஒருதேவலோக புகை மிதக்க
இசையும் நறுமணமும் அடடா...
அத்தனை நிறங்களிலும் மலர்கள்
அத்தனை மரங்களிலும் கனிகள்
தூவிய விதையெல்லாம்
பழுதின்றி கதிராகிச்சாய்கிறது
இதெல்லாம் அவர்களின்
இப்போதைய நினைவு
உங்களிடமும் சொல்வார்கள்
அட்டை எடுத்துச்சென்று
அங்கீகரிப்பீர்கள்
அல்லது நிகழ்ந்துவிடுமெனக் காத்திருப்பீர்கள்
உங்கள் விரல்நுனிக்கறை
விரைவில் அழிந்துவிடும்

வேறுபாடின்றி


நாற்காலியில் சார்த்தி வைப்பது
வழக்கமாயிருந்தது
சிலரைக் கிடத்த 
கனத்த மரபென்ச் போய் வரும்
கண்ணாடிப்பெட்டிகள்
சவுகரியம் கருதிப் பழகினோம்.
எரிப்பதும் புதைப்பதும்
மேடைக்குள் நகர்த்தப் பழகினோம்
ஆதரிப்பது வழக்கமாயிருந்தது
கைவிடுதல்....
பழகிக்கொண்டிருக்கிறோம்

டிசம்பர் பூக்கள்-4

ஏற்றிவந்த சுடர்
அகத்திருக்கிறது 
இருள் 
இருள் என 
அச்சம் கொள்ளாதே
*************************
ஆங்காரமும் அன்புதானாம் 
நன்றாகத்தான் இருக்கிறது 
இந்த 
மொழிபெயர்ப்பு
**********************************
ஒவ்வொரு மரணத்தின்
பின்னும்
உறவு பேணுதல்
குறித்த ஞானோதயங்களும் தீர்மானங்களும் பிறக்கின்றன
உயிர் வாழ்பவர்களால்
மரணிக்கின்றன

**************************************
தெரியும் என்ற இருப்பு
தெரியாததன் நெருப்பில்
நீர் தெளித்து
அவித்துக் கொண்டிருக்கிறது

*****************************
பழுத்த கம்பி 
நீ தொட்டாலும் சுடும் 
கனலின் அடையாளம் 
கற்றல் அவசியம்


************************

டிசம்பர் பூக்கள் -3



ஒருசிரிப்பு
ஒருஅழுகை
ஒருதேம்பல்
ஒருஆகாகாரம்
ஒருகையசைப்பு
ஒருபிரார்த்தனை
ஒருதலையாட்டல்
எனக்கானது
எது
****************************
இருத்தல்முக்கியம் உனக்கு
நகர்தல் முக்கியம் எனக்கு
நகர்ந்துகொண்டேஇருக்கக்
கற்றுத் தருகிறது உலகம்
**********************************
சொல்லிவிட்டுப் போய்விட்டாய் 
தொட்டுப்பார்த்தேன் 
கொதிக்கிறது
*************************************
சாதாரணத்துக்கும்
அசாதாரணத்துக்கும்
இடையில் நடை 
அழைக்குமுன்
அவகாசம் வேணும்
கூத்தாடிக்கம்பை ஊன்றி இறங்க
***********************************
போகட்டும்
சுருட்டி எறிந்தால் குப்பை
காலியாய் விடு
*****************************
நட்சத்திரம்
நிலா
வெளிச்சம்
காற்று
பரவசம்
கதவு திற முதலில்
*************************
சொல்லிவிட்டு
அதுநயம்
என்பதும்
நீயே சொல்கிறாய்
******************************
பெருமிதம்
கர்வம்
சிறுகோடு
அடக்கம்
************************
சரசரவென்று ஓடியது 
பார்த்தேன் அணிலை 
இரவில் இது என்ன செய்கிறது 
அதுவும் பார்த்துதான் போனது

**************************
அவ்வளவே
ஏலாது இனி என நின்ற
கணங்கள்
மீட்டிக்கொள் மனதில்
எழுந்தது புரியும்
********************************
அருகிலிருக்கும்
தொட்டிச்செடி உதிர்வதும்
உலர்வதும்
அறியாது 
நீர் இறைக்கிறாய்
தூரத்துப்பச்சைக்கு
******************************

டிசம்பர் பூக்கள் -2



புன்னகையைப் பார்த்தால்
பதிலுக்குப் புன்னகைக்கவும் இயலாத
சுவர் கல்லிடம் 
பகிருமோ வருத்தம்
********************************

பூவேலை சித்திரங்களோடு
பளிச்சென்ற நிறக்கலவையில்
ஊர்ந்து செல்கிறது
அமரர் ரதம்.
பணி முடிந்தது.
*************************************
கேட்காத பொழுதுகளிலும்
இசை ஒலித்துக்கொண்டே
இருக்கிறது
கேட்பதான பாவனைகளின் சுமையற்று
*****************************************
மறதியை நம்பியிருக்கிறது
காதல்
மறதியை நம்பியிருக்கிறது
பாசம்
மறதியை நம்பியிருக்கிறது
அன்பு
மறதியை நம்பியிருக்கிறது
அரசியல்
மறதியை நம்பியிருக்கிறது
கோபம்
நீ ஏன் நினைவாற்றல் பற்றிக் கவலை கொள்கிறாய்
மறக்கத்தெரிந்தால்
பிழைக்கத்தெரிந்தது போல்தான்
***********************************************
அவசரமாக செல்லவேண்டியிருக்கிறது
சின்னதுதானே என்று சொல்லிவைத்த
பொய்
பொய்தானென்று
நீ கண்டுவிட்டாயோ
இல்லைதானென்றால்
சொல்லித்தொலை
இன்னும் உனக்குப் புலப்படவில்லையென
********************************************
பார்த்தேன்
பார்த்தேன்
பின்னும் பார்த்தேன்
ஒன்றுமில்லை
நீ பார்த்த 
அதுவே என்று
ஒப்புக்கொண்டு நகர்ந்தேன்
நிம்மதி
உனக்கென்று தோன்றினாலும்...
பின்னும் பார்ப்பேன்
நீ
பாரா கணத்தில்
************************************
காற்றின் எதிர்த்திசையில்
புறப்பட்டது
ஒளிக்கீற்று
குவிந்தகரங்கள் காக்க
**********************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...