சனி, பிப்ரவரி 27, 2016

நதி

நான் பார்த்த நதியின்
நீளமும் அகலமும்
நான் பார்த்த மலையின்
உயரமும் உச்சியும்
நான் பார்த்த வானத்தின் 
நிறமும் விரிவும்
நான் பார்த்த வரை
ஓடிக்கொண்டிருக்கும் நதியும்
உயர்ந்து கொண்டிருக்கும் மலையும்
மிதந்து கொண்டிருக்கும் வானமும்
நிஜத்தில் எதுவென்று
நீங்கள் பார்த்ததுண்டா

செவ்வாய், பிப்ரவரி 23, 2016

போலச் சிரிக்குமொரு வாழ்வு

இவ்வளவுதான் என்பது
எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை
இவ்வளவு மட்டுமில்லை என்பதும்
*******************************************************
இறுகமூடிய பிஞ்சுவிரல்களுக்குள்
இருப்பதான பாவனையில் 
மலரவிழும் போதில்
மணப்பதான பாவனையில்
அன்பையும் வைத்திரு
போலச்சிரிக்குமொரு வாழ்வு
******************************************

வலியினடியில்
மிதக்கும் சிரிப்பைத் துழவிக்கொண்டு 
வலியின் கரையோரத்தில்
கதைபேசிக்கொண்டு
எது நீ
எது நான்
******************************************
நீங்கள் சொன்ன பெயர்
மரத்தினுடையதா
பசிய ஒளியோடு
ஆடிக்கொண்டிருந்து விட்டு
இதோ இக்கணம்
உதிரும் இலை
உதிர்த்த கிளை
இரண்டுக்கும் இடையே
இழுபடுவதா
அதனடியில் துளிர்த்துக்
கொண்டிருக்கும் தளிர்
காம்பைப்பற்றியபடி
தன்னுடையது என்றல்லவா சிரிக்கிறது




வெள்ளி, பிப்ரவரி 05, 2016

பிப்ரவரி பூக்கள் -1

ப்ரியம் பருகி பிரபஞ்சம்
அளவு விரிந்து கிடந்தால்
காதணித் திருகில் 
மடங்கிப்பொருந்துவாயோ
வியக்கிறேன்
அதுவும் முடிகிறது

********************************
புறப்பட்டபோது வழி 
தெரியாதிருந்தது
நீ பார்த்தபின்
கைவிளக்கு 
வழித்திண்ணையில் விட்டுவிட்டேன்

*************************************
என்னுடைய எதற்கும்
நான் அடிமையில்லை
நீயும் சிறகுகளை
உயிரோடு விட்டுவை

***********************************
விலக விரும்பா வாழ்வு
தேடி ரோஜாக்களுடன்
நடக்கிறாள்
கிள்ளியெறிந்த முட்கிளை
காய்ந்து உதிரட்டும்
மறித்து நீட்டாதிரும்

*************************************

உங்கள் உலகம்

ஒரு குப்பைத்தொட்டி அகலமாய் உயரமாய்
முடிந்தால் 
நீங்கள் தள்ளிக்கொட்டுவதை 
விரிந்து வாங்கிக்கொள்ள ஏதுவாக 
இருக்க வேண்டுமென்கிறது 
உங்கள் வாழ்க்கை 
ஒரு குச்சியும் உரச்சாக்குமாய் செல்பவளோ

 சின்னதாக இருக்கக்கூடாதா என்கிறாள்.
உங்களிடம்தான் கருத்து கேட்கும் உலகம்


பிரியங்களின் தடம்

இவரைத் தெரியுமா
அவரை...
விசாரித்துக்கொண்டே நகர்கிறது கணிணித்திரை
தெரிந்த மாதிரியும்
தெரியாத மாதிரியும் கூட
மேலவீதி வேப்பமரவீடு
கண்ணாடிக்காரர் மகன்
என்பது போல் மேலதிகக்
குறிப்புகளோடு கேட்காதவரை
ஆத்தாவுக்குப்
போட்டியில்லை

**************************************
எல்லா மரமும்
பூத்திருக்கிறது என்பதற்காக
சோம்பிவிடாது பூக்கும்
மரத்தடியில் 
விழுந்து வணங்குகிறேன்.
முருங்கையை
ஆட்கொண்ட தெய்வத்தின் பெயர் தேடாதீர்

***************************************

இந்தப்பிரியத்தை
வரைந்து காட்ட முடிந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
நிறம் தீட்ட உன்னை 
அழைத்திருக்கலாம்
பேச்சுக்கு சொல்வது
போலவே
நீயும்
திருத்தங்கள் சொல்லியிருப்பாய்
பிறகு அது
உன் ஓவியமாகி இருக்கும்
என் பிரியம்
வழக்கம்போல மிதியடிக்கு அருகே சுருண்டிருக்கும்

****************************************************
இது நான் சொல்ல விரும்பியது
யாரோ சொல்லி விட்டாராமே
நான் சொல்ல வந்தது
இல்லையென்றாகி விடுமா

*********************************************
திரும்பிப் பார்க்காமல் 
போக வேண்டும் என்பது
திரும்பிப் பார்க்கும்போது
மறந்து விடுகிறதோ

***********************************

நடப்பு







ஆமோதிப்பதையே விரும்புகிறீர்கள்
குழந்தையின் சிணுங்கல் கூட
எதிர்ப்புக்குரலோ எனஅஞ்சுகிறீர்கள்
கொசுவிரட்ட
இடமிருந்து வலமோ
வலமிருந்து இடமோ
திரும்பும் தலைகளைக் கொய்யவும்
உங்கள் வாட்கள் தயங்குவதில்லை
அச்சமே ஆபரணம்
ஆத்திரமே ஆடை
எச்சரிக்கையாய் நாங்களும்
எரிச்சலாய் நீங்களும்
உலவும் மேடை
அதிர்கிறது இடைப்பட்டோர் குறட்டையில்




ஜனவரிப்பூக்கள் -5

எதிர்பார்த்து ஏமாறுவது
வழக்கம்தான்
எதிர்பார்ப்புக்குமுன்பே ஏமாறுவது
எதிர்பாராதது
****************************************************

ஒருகவிதை சித்திரம்போல
அமைந்துவிடுகிறது
ஒருசித்திரம் கவிதைபோல
அமைந்துவிடுகிறது
நாம்தான் நம்மைப்போலவும்
அவர்களைப்போலவும் இல்லாது....


****************************************
யாரோ என்பவர் யாரோதான் 
யார் யாராகவோ 
நீங்கள் நினைத்துக்கொள்வதற்கு 
யாரும் பொறுப்பல்ல

**********************************************
இயல்பாகப் பேசாதீர்கள் 
இயல்பு மீறிப்பேசாதீர்கள்
இதுவே இயல்பென்று பேசாதீர்கள்
இயல்பு தாண்டியதென்றும் பேசாதீர்கள்
பேசாதிருத்தலை
இயல்பாக்க இயலுமா பாருங்கள்
எல்லாம் இயல்பாகிவிடும்

*******************************************
அந்தநாள் வந்துவிட்டதென்று
நீங்கள் தயாராகிறீர்கள்
அந்தநாளுக்குத்தெரியுமா
நீங்கள் காத்திருப்பது
வேறுதிசையில் திரும்பிவிடப்போகிறது

**********************************************
வெட்கமாகத்தான் இருக்கிறது
தெருநாய்முன்
விழும் ரொட்டித்துண்டு போல
உன் பச்சாதாபத்துக்காகக் காத்திருப்பது

பழகிவிட்டது வெட்கம்
*************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...