இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாஸ்பரஸ் பாசம்

படம்
அப்படி ஒன்றும்
நீயும் நானும் கொஞ்சிக் 
கொள்ளவில்லை
கடித்துத் துப்பிக்கொண்ட 

பாஸ்பரஸ் பாசம்தான் பலநாள்
இரண்டு நாளுக்கொருமுறையாவது
அழைத்தாலென்ன என்பது
புகாருமில்லை புலம்பலுமில்லை 

என்றுதான்
நீயும் மறுப்பாய்
சுயமரியாதைக்கும் 

கவன ஈர்ப்புக்குமான பந்தயத்தில்
தோற்ற பொழுதுகளை 

நினைவாக்கிப் போனாய்
வருவேனென்றால்
நீ பத்திரப்படுத்தும்
ஒரு துண்டு பூச்சரம் 

இப்போதும் கிடைக்கிறது உன் வாசமின்றி
ஏனிந்த நிழலாடல்
நான் நீ ஆகிக் கொண்டிருக்கிறேனோ அம்மா
நிலா நதி ரசீது

படம்
கரையோரம் 
காத்திருந்த போதெல்லாம்
கையிலிருக்கும் துடுப்பு
ஓடமேறும்போது
தவறிவிடுகிறது


****************************************
நிலா 
நடந்துகொண்டிருக்கிறது
கரையோர மரங்களூடே
நதியில் 

முகம்பார்க்கவியலாத போதும்
*************************************************

எந்த குற்றவுணர்ச்சி வழிந்தாலும்
ரசீதுகளால் துடைத்துக்கொள்ள முடிகிறது
பாக்யம் பாக்யம்

*************************************************************
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை..
.....
...திரும்பத் திரும்ப தெரியாமல்
எழுதிவிட்டேனா எனப் பார்க்கிறீர்கள்
நூறு வரி கடந்து
வேண்டுமானால் ஒருமுறை
எழுதிவிடுகிறேன்
விசாரணை,வழக்கு,கைது
பிணை....வருடங்கள்.....

********************************************************


கொலைவாளினை எடடா

படம்
தலைகுப்புற விழுந்தவனைப் பார்த்து 
உச்சு கொட்டுகிறீர்கள்
அந்த தலையே காலென்று 

கண்டுபிடிக்கப்படும் நாளுக்காக
அவன் காத்திருக்கிறான்


***************************************************
உங்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள்
ஐயோ பாவம்
என்னென்னவோ படுபாடு படுகிறீர்கள்
அட டா
காக்காய் குருவிக்காக 
தண்ணீர் வற்றிப்போன  நீர்த்தடம் பார்த்து கூட அழுகிறீர்களாம்
சற்றே காத்திருங்கள்
இதோ வந்துவிடுவார் தலைவர்
இப்போது என்ன செய்கிறாரா அதிகப்பிரசங்கியாக இருப்பதுதான்  உங்கள்
முதல் பிரச்சினை
போய் வாருங்கள்
பக்குவப்பட்ட பின் வந்து சந்திக்கலாம் ************************************************************* இவ்வளவுதானே
என்பதே
கொலைவாளாகி விடக்கூடும்
அவ்வளவுதான் *********************************************

எப்படி இப்படி

படம்
கொஞ்சமே கொஞ்சம்
என்னை எடுத்து
மேசையில் வைப்பீர்கள் ஒருநாள்
நேற்று அவனையும்
முன்தினம் அவளையும்
அதற்கும் முன் அவரையும்
இவரையும்
கிள்ளிக்கிள்ளி வைத்திருந்தது போலவே
உங்களுக்கு வேண்டியதென்ன
கிள்ளிவைக்க ஏதோ ஒன்று


***************************************************
இது காற்றின் பாதை
அசைத்துவிட்டுத்தான்
போகும்
குறும்புச்சிரிப்புடன்
குறுக்கிடுகிறது கடல் 
*********************************************************** முகமிருக்கும்
தெரியும்
அது
இப்படியிருக்குமென்று
தெரியாது
எப்படியிருக்குமென்றே
தெரியாத ஒன்று
எப்படியிருந்தால்தான்
என்ன
******************************************************

செய்

படம்
அந்தந்த நிமிடத்தில் வாழ்வதன் சுமை  தாங்க இயலாதிருக்கிறது
இதற்கு முந்தைய நிமிடத்திலும்  இப்படித்தான் தோன்றியது என்பதை  நினைவில் கொண்டுவந்து 
ஆறுதல் கொள்ள முயற்சிக்கிறீர்கள்
அது எவ்வளவோ இலேசாக இருந்ததே  எனச்சொல்லியபடி
இந்த நிமிடத்தை இறக்க முற்படுகிறீர்கள்
சங்கிலி எங்கு பிணைத்திருக்கிறது  என்பதைக் கண்டடைவதற்குள்
இதுவும் முந்தைய நிமிடமாகிவிடுகிறது

************************************************************************* விருப்பம் என்பது விருப்பமற்றிருப்பதற்கு  அருகில்தான் இருக்கிறது
ஒற்றைப்படை இலக்கத்திற்கு எதிர்ப்புறமாக
இரட்டைப்படை இலக்கத்தினை
அமைத்திருக்கும் குறைந்தபட்ச
இடைவெளி கூட இல்லாமல்
அடுத்தடுத்தே இருக்கிறது
அடுக்கு செம்பருத்தியின்
இதழ்களைப்போன்ற அமைப்பில்
எது விருப்பம்
எது விருப்பமின்மை என்று
அடையாளம் காண்பதை  வாழ்நாள் வேலையாகச்  செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறாய்
செய்
***********************************************************************************


இலையுதிர்கால புத்தன்

படம்
நியாயமான அன்பு
நியாயமான மரியாதை
நியாயமான அனுகூலம்
நியாயமான அங்கீகாரம்
நியாயமான சேவை
நியாயமான கவனம்
நியாயமான புன்னகை
எதுவுமே நெருங்கவில்லை
அநியாயமான ஒவ்வொன்றையும்
நியாயமான ஒன்றாக்கிடும்
திறமையில்லை தானே
அநியாயமான வெம்பலோடு
செத்துப்போங்கள்
அதுவே இவ்வுலக நியாயம்
****************************************************

புத்தன் உறங்கிக்கிடக்கிறான்
இலையுதிர்கால மரத்தடியில்
கனவில் தளிராடியதே
போதுமாயிருக்கிறது

*****************************************************
நீதான் என்ற உறுதிப்படுத்தலுக்கு முன்பே முடித்துவிட்டது
நீயோ என்ற ஐயம்
*****************************
விழுவதற்கென்றே காத்திருப்பவர்களிடம்
கையசைத்தவாறே எழுவதான ஞானம் 
சித்திக்கட்டும்\
*************************************
பாதையை மறிப்பதாக
இழுத்துக் கொத்தாக்கி
கட்டிவைத்த இடுக்கிலிருந்து
முண்டி வெளிவந்து
சிரிக்கிறது ஒற்றை அரளி

***********************************************************
ஊஞ்சல் பார்க்கும்போது
மனசு கூட ஆடவில்லை
மட்டப்பாறையாகி விட்ட
அதோடு இனி என்ன செய்ய